இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் தப்பி வந்து கொள்ளையனாக மாறியவர் சிக்கினார்
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் தப்பி வந்து கொள்ளையனாக மாறி பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டவரை ராமநாதபுரம் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் தப்பி வந்து கொள்ளையனாக மாறி பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டவரை ராமநாதபுரம் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தொடர் திருட்டு
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பகுதியில் உள்ள சேதுபதி நகரை சேர்ந்தவர் வசந்தி. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். ஆசிரியர்.
இவர்கள் இருவரின் வீட்டில் கடந்த மாதம் 20-ந் தேதி பகலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 20 பவுன் நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர் திருடிச் சென்றார். இதேபோல ராமநாதபுரம் நகர் மற்றும் பரமக்குடி பகுதிகளிலும் தொடர் திருட்டு நடந்தது.
கொள்ளையனை பிடிக்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின்பேரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்திரவேல், கஜேந்திரன், ஏட்டு புகழேந்தி உள்ளிட்டோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கைரேகையை வைத்து விசாரணை
விசாரணையில் ஒரு இடத்தில் மட்டும் சந்தேகத்திற்குரிய கைரேகை தடயம் சிக்கியது. இந்த கைரேகையை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று' சினிமா பட பாணியில் தனிப்படையினர் விசாரணையை துரிதப்படுத்தினர்.
திருட்டில் ஈடுபட்டவரின் கைரேகை, கோவை பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கிடைத்த கைரேகையுடன் ஒத்துப்போனதை அறிந்தனர். போலீசார் அது சம்பந்தமான நபரின் விவரங்களை சேகரித்தனர். இதில் இலங்கை திரிகோணமலையை சேர்ந்த அப்துல் ரியாஸ்கான் (வயது 38) என்பது தெரிந்தது.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ளனர். அவர் புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று அப்துல் ரியாஸ்கானை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கள்ளத்தோணியில் வந்தவர்
அப்துல் ரியாஸ்கான் தனது தந்தையுடன் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் தமிழகம் வந்து மதுரையில் பாஸ்போர்ட் வழக்கில் கைதானவர். புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வெளியில் வந்த அப்துல் ரியாஸ்கான், கோவை சென்று அங்கு பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதானார். அங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த கைதி ஒருவரின் பழக்கம் கிடைத்தது.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் வந்துள்ளார். அங்கு முகம்மதியாபுரத்தில் வீடு பிடித்து தங்கினார். டிப்-டாப் ஆக உடையணிந்து வீடு தேடிச்சென்று செல்போன் பழுது நீக்கி கொடுக்கும் வேலை பார்த்துள்ளார். இவ்வாறு செல்லும் போது அந்த வீடுகளையோ, அருகில் பூட்டி உள்ள வீடுகளையோ நோட்டமிட்டு திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் திருடிய பின்னர், புதுச்சேரிக்கு சென்று, பின்னர் பிடிபட்டுள்ளார்.
பறிமுதல்
இவர் மீது சென்னயில் 2, கோவையில் 4 வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட அப்துல் ரியாஸ்கானிடம் இருந்து 15 பவுன் நகை, ரூ.49 ஆயிரம், கார், மோட்டார் சைக்கிள், 3 கைக்ெகடிகாரம், ஒரு கேமரா, ஒரு ஜோடி கையுறை மற்றும் வீடுகளின் கதவு பூட்டுகளை உடைக்க பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் திருட்டில் ஈடுபட்டவரை, கைரேகை தடயத்தை வைத்து கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, துணை சூப்பிரண்டு ராஜா ஆகியோர் பாராட்டினர்.