நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!
தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், நாளை (திங்கட்கிழமை) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி (புதன்கிழமை) தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.