திருமணமான 2 மாதத்தில் காதல் தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை

தருவைகுளம் அருகே திருமணமான 2 மாதத்தில் காதல் தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-12-28 18:45 GMT

தருவைகுளம் அருகே திருமணமான 2 மாதத்தில் காதல் தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூலித் தொழிலாளி

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் அனந்தமாடன்பச்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் தங்கமுனியசாமி (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள அனல்மின்நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். விளாத்திகுளம் அருகே உள்ள துவரங்கை பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (22). இவர் அனந்தமாடன்பச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வருவாராம். அப்போது, தங்கமுனியசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து 2 பேரும் காதலித்து வந்தார்களாம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு அனந்தமாடன்பச்சேரியில் வசித்து வந்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் அவர்ளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறக்க முயன்று உள்ளனர். ஆனால் உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் தருவைகுளம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தருவைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஒரு கயிற்றின் ஒரு முனையில் தங்க முனியசாமியும், மற்றொரு முனையில் சீதாலட்சுமியும் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தனர்.

இதைத் தொடர்ந்து தருவைகுளம் போலீசார் இறந்த கணவன், மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்தனர். திருமணமான 2 மாதத்தில் கணவன், மனைவி இறந்து உள்ளதால் உதவி கலெக்டர் கவுரவ்குமார் விசாரணை நடத்தினார். புதுமண காதல் தம்பதிகள் ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்