வெங்காயம் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வெங்காயம் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்:
கர்நாடக மாநிலம் தாமணிகரையில் இருந்து திருச்சிக்கு வெங்காய லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை கோகுல்தாஸ் (30) என்பவர் ஓட்டி வந்தார். இவர் தர்மபுரி- சேலம் மெயின் ரோடு ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே லாரியை நிறுத்தினார். பின்னர் சமையல் செய்ய மண்எண்ணெய் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது மண்எண்ணெய் அடுப்பு வெடித்து சிதறியதாக தெரிகிறது. அந்த தீ லாரியில் பிடித்து எரிய தொடங்கியது. தகவல் அறிந்த காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையிலான வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். காயம் அடைந்த டிரைவர் கோகுல்தாஸ் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லாரி முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.