மேம்பாலத்தில் கனிம வளம் ஏற்றிய லாரி மோதியது

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிம வளம் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. அங்கு திரண்டு வந்த பொதுமக்களை லாரி டிரைவர்கள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-19 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிம வளம் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. அங்கு திரண்டு வந்த பொதுமக்களை லாரி டிரைவர்கள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கனிம வளம் ஏற்றிய லாரி

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் ஏற்றியபடி டாரஸ் லாரிகள் மார்த்தாண்டம் வழியாக தினமும் சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

மேலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அது குறைந்தபாடில்லை.இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் கனிம வளம் ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒரு டாரஸ் லாரி மார்த்தாண்டம் பம்மம் பகுதிக்கு வேகமாக வந்தது.

மேம்பாலத்தில் மோதியது

அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பமும் உடைந்து விழுந்தது. இதில் லாரியை ஓட்டிய டிரைவரும் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே அங்கு பொதுமக்கள் ஓடி வந்தனர்.

அந்த சமயத்தில் விபத்துக்குள்ளான லாரியில் இருந்தவர்கள் மற்றும் கனிம வளம் ஏற்றி வந்த மற்ற லாரிகளை ஓட்டியவர்கள் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இங்கிருந்து சென்று விடுங்கள், இது சாதாரண விபத்து தான் என கூறி அவர்களை திடீரென விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் லாரியை மீட்டு சாலையோரம் கொண்டு சென்றனர்.

கனிமவளம் ஏற்றி வரும் லாரிகளால் தொடரும் விபத்து நடைபெறுவதாகவும், எனவே கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்