கரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

விக்கிரவாண்டி அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற கரும்பு ஏற்றி வந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்த முயன்றபோது நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

Update: 2023-04-16 18:45 GMT

விக்கிரவாண்டி

சர்க்கரை ஆலைக்கு

நேற்று முன்தினம் இரவு திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள சுந்தரேசபாளையம் பகுதியிலிருந்து கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை நோக்கி வந்து கொண்டிருந்தது. முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென லாரி பழுதாகி நடுரோட்டிலேயே நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவலறிந்த விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, துரைராஜ், அரி விநாயகம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழுதாகி நின்ற லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்த முயன்றனர்.

நடுரோட்டில் கவிழ்ந்தது

அப்போது அதிகபாரம் காரணமாக நிலைதடுமாறி லாரி நடுரோட்டிலேயே கவிழ்ந்தது. இதனால் கரும்பு கட்டுகள் அனைத்தும் சாலை முழுவதும் சிதறி கிடந்ததால் திருச்சி-சென்னை மார்க்கத்தில் உள்ள சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் நீண்ட வாிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து இரவு 10 மணிமுதல் அருகில் உள்ள இணைப்பு சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. சாலையில் கிடந்த கரும்புகளை அகற்ற சர்க்கரை ஆலை நிர்வாகம் மாற்று லாரியை ஏற்பாடு செய்யாத காரணத்தால் கரும்பு கட்டுகள் இரவு முழுவதும் சாலையிலேயே கிடந்தது.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் நேற்று காலை 7 மணிக்கு மாற்று வாகனமாக டிராக்டர் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த கரும்பு கட்டுகளை அங்கிருந்து ஏற்றி சா்க்கரை ஆலைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து காரணமாக நேற்று முன்தினம் இரவு 9.15 மணி முதல் நேற்று காலை 11.30 மணிவரை திருச்சி- சென்னை சாலையில் சுமார் 16 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்