கேரளாவில் இருந்து மீன் கழிவுநீர் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்-பொள்ளாச்சி அருகே பரபரப்பு
பொள்ளாச்சி அருகே கேரளாவில் இருந்து மீன் கழிவுநீர் ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர். அந்த லாரிக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கேரளாவில் இருந்து மீன் கழிவுநீர் ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர். அந்த லாரிக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
லாரி சிறைபிடிப்பு
பொள்ளாச்சி -தாராபுரம் ரோட்டில் பெரியாகவுண்டனூரில் சாலையோரங்களில் இறைச்சி கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் இருந்து கழிவுநீரை விடுவதற்கு வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பொதுமக்கள் இந்த லாரிக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ரூ.25 ஆயிரம் அபராதம்
இதையடுத்து ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேரளா மாநிலம் பட்டாம்பியில் இருந்து தூத்துக்குடிக்கு மீன் ஏற்றி சென்ற லாரி என்பது தெரியவந்தது. மேலும் வாகனத்தில் இருந்து கழிவுநீரை சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கொட்டுவதற்கு வந்தது தெரியவந்தது. அந்த லாரியின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊராட்சி பகுதிகளில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.