100 அடி பள்ளத்தில் லாரி, ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி, ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்பு பணியால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Update: 2022-11-12 19:00 GMT

வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி, ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்பு பணியால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மணிஹட்டி பகுதியில் தேயிலை இலைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவில் கோவை மாவட்டம் வால்பாறைக்கு புறப்பட்டது. லாரியை ஊட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 23) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக அதே ஊரைச்சேர்ந்த சிவக்குமார் (46) என்பவர் இருந்தார்.

இந்த லாரி நள்ளிரவு 1.30 மணியளவில் பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர்

அப்போது லாரி பள்ளத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றதால் லாரியின் டிரைவர் விக்னேஷ், கிளீனர் சிவக்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த நிலையில் லாரி கவிழ்ந்தது குறித்து தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கோட்டூரில் இருந்து ஆம்புலன்சும் அங்கு வந்தது. இந்த ஆம்புலன்சை டிரைவர் சக்திவேல் இயக்கினார். ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் முத்துராஜ் இருந்தார்.

லாரியில் இருந்தவர்களுக்கு பெரியளவில் காயம் ஏற்படாததால் டிரைவர் சக்திவேல் ஆம்புலன்சை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, பள்ளத்தில் விழுந்த லாரியை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆம்புலன்சும் பள்ளத்தில் கவிழ்ந்தது

அப்போது திடீரென ஆம்புலன்ஸ் நகர்ந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆம்புலன்சில் யாரும் இல்லாதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து காலை 11 மணிக்கு வால்பாறை தாசில்தார் ஜோதிபாசு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, ஆம்புலன்சை மீட்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி அங்கு காடம்பாறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் மீட்பு பணி நடைபெற்றதால் சாலையின் இருபுறமும் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள், சுற்றுலா வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் அணி வகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி மதியம் 3 மணிக்கு முடிவடைந்தது. இதனால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி, ஆம்புலன்ஸ் மீட்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்