சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொள்ளாச்சி
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
குளிர்ச்சியான காலநிலை
பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை என்றாலும், அவ்வப்போது சாரல் மழை மட்டும் பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை, டாப்சிலிப் போன்ற சுற்றுலா தலங்களில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. இதனால் கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மேலும் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் வால்பாறை செல்வதற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
கூழாங்கல் ஆறு
இதற்கிடையில் ஆழியாறு அருகே குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் வால்பாறையில் குளு குளு கால நிலை நிலவியதால், அங்குள்ள கூழாங்கல் ஆறு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். குறிப்பாக கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், சுற்றுச்சூழலை பாதுகாக்க வனத்துறையினர் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
யானைகள் நடமாட்டம்
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களது வாகனங்கள் சோதனை செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படுகிறது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளில் வீசி எறிவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும். மேலும் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வால்பாறை சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.