சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி

ஊட்டி அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-26 14:08 GMT

ஊட்டி, 

ஊட்டி அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுத்தை புலி

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, காட்டெருமை, கடமான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் ஊட்டி அருகே மந்தடா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நீலகிரி வடக்கு வனச்சரகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து நீலகிரி வன கோட்ட அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன அலுவலர் சரவணன் மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் ஆகியோர் இறந்த கிடந்த சிறுத்தையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

சுருக்கு கம்பி

இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சுருக்கு கம்பி வைக்கப்பட்ட இடம் மற்றும் தேயிலை தோட்டத்தில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி சிறுத்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட விலங்குகள் பயிர்களை நாசப்படுத்துவதை தவிர்க்க, சுருக்கு கம்பிகளை அமைத்து வருகின்றனர்.

மேலும் வேடையாடுவதற்காகவும் சுருக்கு கம்பி பயன்படுத்தப்படுகிறது. மர்ம நபர் வைத்த சுருக்கில், சிறுத்தையின் வயிற்றுப்பகுதி சிக்கி உள்ளது. விலங்குகளுக்கு சுருக்கு வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும் சிறுத்தை இறந்து கிடந்த இடத்தின் அருகே மான் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தை மற்றும் மானின் உடற்பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்