ஆட்டுக்குட்டியை கவ்விச்சென்ற சிறுத்தைப்புலி

கடம்பூரில் ஆட்டுக்குட்டியை கவ்விச்சென்ற சிறுத்தைப்புலியை நாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டி அடித்தன. ஆட்டுக்குட்டியை கவ்வியது

Update: 2023-06-12 21:10 GMT

டி.என்.பாளையம்

கடம்பூரில் ஆட்டுக்குட்டியை கவ்விச்சென்ற சிறுத்தைப்புலியை நாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டி அடித்தன.

ஆட்டுக்குட்டியை கவ்வியது

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைக்கிராமத்தில் உள்ள மாமரத்துதொட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் மாதேஷ். விவசாயி. இவர் வீட்டின் அருகே பட்டி அமைத்து ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது.

இதனால் வீட்டுக்குள் இருந்து மாதேஷ் வெளியே வந்து பார்த்தார். அப்போது பட்டியில் இருந்து சுமார் 4 மாதமே ஆன ஆட்டுக்குட்டியை சிறுத்தைப்புலி ஒன்று கவ்விச்செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தன்னை சிறுத்தைப்புலி தாக்கிவிடக்கூடாது என்று வீட்டுக்குள் ஓடிவிட்டார்.

நாய்கள் கடித்தன

இந்தநிலையில் பட்டியில் இருந்து வெளியே ஓடிய சிறுத்தைப்புலி ஆட்டுக்குட்டியை வேட்டையாடிவிட்டு, குரும்பூர் மொசல்மடுவு பகுதியில் குப்புசாமி மற்றும் குஞ்சாயி என்பவர்களின் வீடுகளில் இருந்த நாய்களை பிடிக்க முயன்றது. உடனே 2 நாய்களும் குரைத்ததால் தெருவில் சுற்றிய 5-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கு ஓடிவந்தன. அதன்பின்னர் அனைத்து நாய்களும் ஒன்று சேர்ந்து சிறுத்தைப்புலியை சுற்றி வளைத்து கடிக்க தொடங்கின. இந்த சத்தத்தை கேட்டு அந்த தெருவில் வசித்தவர்கள் வௌியே வந்து பார்த்துள்ளனர். அப்போது சிறுத்தைப்புலியும், நாய்களும் சண்டையிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வனப்பகுதிக்குள் ஓடியது

ஒரு கட்டத்தில் நாய்களின் கடியை பொறுக்க முடியாமல் சிறுத்தைப்புலி அங்கிருந்து அருகே உள்ள ஒரு வாழைத்தோட்டம் வழியாக வனப்பகுதியை நோக்கி ஓடிவிட்டது. இதுகுறித்து கடம்பூர் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தைப்புலி வந்து சென்ற 2 இடங்களிலும், அது ஓடிய வாழைத்தோப்பிலும் பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் வனத்துறையினர் கூறும்போது, 'வந்து சென்றது சிறுத்தைப்புலி என்று உறுதி செய்யப்பட்டால் கண்காணிப்பு கேமரா பொருத்தி அதன் நடமாட்டத்தை கண்டறிவோம். அதன்பிறகு தகுந்த நடவடிக்கை எடுப்போம்' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்