இணைய வழி வகுப்பு பயன்பாட்டுக்காக மாணவர்களுக்கு கையடக்க கணினி
திருவண்ணாமலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இணைய வழி வகுப்பு பயன்பாட்டுக்காக மாணவர்களுக்கு கையடக்க கணினியை கலெக்டர் வழங்கினார்.
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உண்டு உறைவிட வசதியோடு பிளஸ்-2 படித்து வரும் 30 மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி வகுப்பு மற்றும் தேர்வு பயன்பாட்டுக்காக கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினியை வழங்கினார்.
தொடர்ந்து அவர் மாதிரி பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் நுழைவு தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும். அதற்கான வழிமுறைகளையும் தெளிவாக விளக்கி கூறினார்.
மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து தேவைகளையும், தங்கும் வசதி, கழிப்பிட வசதி, உணவுகளின் தரம் பற்றியும் மாணவ, மாணவிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
எந்த தேவைகள் இருந்தாலும் கேளுங்கள். தேவைகள் அனைத்தும் உடனடியாக செய்து தரப்படும் என்று கலெக்டர் மாணவர்களிடம் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், தலைமை ஆசிரியர் ராமதாஸ், ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.