தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், குடும்பத்துடன் வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்றுகாலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கு நுழைவுவாசலில் வந்த பெண் திடீரென்று பையில் எடுத்து வந்த பாட்டிலில் உள்ள மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை அங்கிருந்த போலீசார், கவனித்து மண்எண்ணெய் பாட்டிலை அந்த பெண்ணிடம் இருந்து பறித்து தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதன்காரணமாக அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில் அவர், பல்லடம் 63 வேலம்பாளையம் ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த முத்துசாமியின் மனைவி பத்மாவதி (வயது 40) என்பதும், உடன் வந்தவர்கள் அவருடைய தாயார் சுந்தரம்பாள் (70), சகோதரி மகாலட்சுமி (45), கணவன், மகன், மகள் என்பதும் தெரியவந்தது. பின்னர் பத்மாவதி கொடுத்த மனுவில், 'நாங்கள் விசைத்தறி தொழிலாளர்கள். எனது தந்தை வழி சொத்து சுக்கம்பாளையத்தில் 5 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் அந்த நிலத்தை உறவினர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்து அந்த நிலத்தை அபகரிக்க முயன்று வருகிறார்.
நடவடிக்கை
இதுதொடர்பாக பல்லடம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது கடந்த 10-ந் தேதி எங்கள் தோட்டத்தில் புகுந்த உறவினர் மற்றும் அவரது தரப்பினர் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் வந்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நில அபகரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
------------
குறிப்பு படம் உண்டு.
----