மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி பலி

காங்கயம் அருகே மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி பலியானார்.

Update: 2023-10-03 12:53 GMT

திருப்பூர்

காங்கயம் அருகே மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி பலியானார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மரம் ஏறும் தொழிலாளி

ஈரோடு மாவட்டம் சிவகிரி வீரசங்கிலி அருகே உள்ள ஊதிமரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவருடைய மனைவி செல்வி. இவர் கணவருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அகல்யா என்ற மகளும், அபிஷேக் என்ற மகனும் உள்ளனர். சரவணன் தென்னை மரம் ஏறும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காங்கயத்தை அடுத்த மூலக்கடை அருகே சங்கரன் காடு தென்னந்தோப்பில் உள்ள தோட்டத்தில் தேங்காய்களை பறித்து டிராக்டரில் ஏற்றிக்கொண்டிருந்தனர். சரவணன் அவரது மனைவி செல்வி உள்பட 5 பேர் இந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

மின்சாரம் தாக்கியது

அப்போது அருகே உள்ள தோட்டத்தில் வேப்ப மரத்தில் மின்கம்பிகள் உரசி கொண்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சரவணன் அருகே கிடந்த இரும்பு கம்பியில் பொருத்தப்பட்ட சல்லகத்தியை எடுத்து வேப்பமர கிளைகளை வெட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

அப்போது மரத்தின் அருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பிகளில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சரவணன் தூக்கி வீசப்பட்டுள்ளார். சத்தம் கேட்டு மனைவி மற்றும் உடன் இருந்தவர்கள் அங்கிருந்த வாகனத்தில் சரவணனை தூக்கிக்கொண்டு காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பரிதாப சாவு

அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சரவணன் உடலை காங்கயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்