நிலத்தகராறில் சித்தப்பாவை கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

நிலத்தகராறில் சித்தப்பாவை கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஆத்தூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-08-31 20:43 GMT

சேலம் மாவட்டம் கரியகோவில் அருகே சூலாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மொட்டையன். இவருடைய அண்ணன் லட்சுமணன். இவர்கள் இருவருக்கும் பொதுவாக இருந்த 11 ஏக்கர் நிலத்தை பிரித்து பாகப்பிரிவினை செய்து விவசாயம் செய்து வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி மொட்டையன் அவரது வீட்டில் இருந்த போது, மதுபோதையில் லட்சுமணனின் மகனான கூலித்தொழிலாளி கனகராஜ் (வயது 38) என்பவர் வந்தார். பின்னர் அவர் நிலத்தை பாகப்பிரிவினை செய்த விவகாரம் தொடர்பாக மொட்டையனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து கரியகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கனகராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட, கனகராஜிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்