உடலில் மண்எண்ணெய் சிந்தியது தெரியாமல் பீடி பற்ற வைத்த தொழிலாளி உடல் கருகி சாவு
ஆரல்வாய்மொழி அருகே உடலில் மண்எண்ணெய் சிந்தியது தெரியாமல் பீடி பற்ற வைத்த தொழிலாளி உடல் கருகி பலியானார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே உடலில் மண்எண்ணெய் சிந்தியது தெரியாமல் பீடி பற்ற வைத்த தொழிலாளி உடல் கருகி பலியானார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
ஆரல்வாய்மொழி அவ்வையார் நகரை சேர்ந்தவர் யோகேந்திரன் (வயது 50). இவர் வெள்ளமடம் பகுதியில் பீரோ தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு யோகேந்திரன் மது போதையில் வீட்டுக்கு வந்து படுத்துள்ளார். அவர் தூங்கி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மண்எண்ணெய் கேன் சரிந்து விழுந்தது. இதில் யோகேந்திரனின் உடல் முழுவதும் மண்எண்ணெயால் நனைந்தது. இது தெரியாமல் யோகேந்திரன் அயர்ந்து தூங்கியுள்ளார்.
உடல் கருகி சாவு
இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு எழுந்த யோகேந்திரன் உடல் மீது மண்எண்ணெய் சிந்தியது தெரியாமல் பீடியை பற்ற வைத்துள்ளார். அப்போது அவர் சட்டையில் பற்றிய தீ உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். உடனே அவரது சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் தீயில் அவரது உடல் கருகியது. பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யோகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்எண்ணெய் உடலில் சிந்தியது தெரியாமல் பீடியை பற்ற வைத்த தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.