மின்சாரம் இல்லாத சமையல் கூடம்...துர்நாற்றம் வீசும் கழிப்பிடம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 433 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 290 மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

Update: 2023-06-24 19:45 GMT

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 433 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 290 மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு வாந்தி

இந்த பள்ளியில் நேற்று முன்தினம் மதியம் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்பட்டது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அங்குள்ள சத்துணவு மையத்தில் கடந்த 4 மாதங்களாக மின்வசதி இல்லாதது தெரியவந்துள்ளது. போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் சமையல் செய்து வருகின்றனர். மேலும் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளும் சரிவர இல்லை. இதனால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இந்த பரிதாப நிலையை மாற்றித்தர பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

கழிப்பிடத்தில் துர்நாற்றம்

இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:-

இங்கு சத்துணவு மையம் கட்டும்போது, மின்வசதி இருந்தது. கடந்த 4 மாதங்களாக துண்டிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் மின் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், ஏதாவது பூச்சிகள் உணவில் விழுந்தால் கூட தெரியாது. தற்போது பழைய முட்டைகளை வழங்கியதால் மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும்போது, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. இங்குள்ள கழிப்பிடம், பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்தை விட பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பதிவேடுகள் ஆய்வு

இதுகுறித்து சத்துணவு திட்ட அதிகாரிகள் கூறுகையில், இங்குள்ள சத்துணவு மையத்தில் மின் இணைப்பு இல்லாதது குறித்து எந்த தகவலும் வரவில்லை. ஆய்வு செய்த பிறகுதான் மின் இணைப்பு இல்லாதது தெரியவந்தது. மீண்டும் மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பழைய முட்டை கொடுக்கப்பட்டு உள்ளதாக வந்த புகார் தொடர்பாக பதிவேடுகள் ஆய்வு செய்யப்படும். சத்துணவு மையத்தை சுகாதாரமாக வைத்து கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்