குமரியில் தக்காளி கிலோ ரூ.140-ஐ தொட்டது

குமரி மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒரு தக்காளி ரூ.140-க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2023-07-03 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒரு தக்காளி ரூ.140-க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தக்காளி விலை உயர்வு

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாகவே அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி விலை எகிறி வருகிறது.

குமரி மாவட்ட மொத்த மார்க்கெட்டுகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு விற்பனை ஆன ஒரு கிலோ தக்காளி நேற்று முன்தினம் 110 ரூபாயாக உயர்ந்தது. அது நேற்று 120 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. அதுவே சாதாரண கடைகளில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

வியாபாரி கருத்து

இதுபற்றி வடசேரி கனகமூலம் சந்தை காய்கறி வியாபாரி சந்தோஷிடம் கேட்டபோது, "குமரி மாவட்ட சந்தைகளுக்கு ஓசூரில் இருந்து தான் அதிகமாக தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படும். முன்பெல்லாம் எப்போது தேவை என்றாலும் தக்காளியை மொத்தமாக வாங்கி கொள்ளலாம். ஆனால் தற்போது காலையில் மட்டும் தான் வாங்க முடிகிறது. 30 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி மட்டுமே கிடைக்கிறது. தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு இருக்கிறது. வரத்து மிகவும் குறைவாக இருக்கிறது. விளைச்சல் குறைவு மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகிய காரணங்களால் தக்காளி வரத்து குறைந்து இருப்பதாக கூறுகிறார்கள்" என்றார்.

இதே போல இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து இருக்கிறது. அதாவது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ இஞ்சி தற்போது 240 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 2 நாட்களில் மட்டும் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த மிளகாய் விலை நேற்று குறைந்துள்ளது. 180 ரூபாய்க்கு விற்பனை ஆன ஒரு கிலோ மிளகாய் 30 ரூபாய் குறைந்து 150-க்கு விற்பனை ஆகிறது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு கிலோ தக்காளி வாங்கிய இடத்தில் தற்போது அரை கிலோ, கால் கிலோ தான் வாங்கி பயன்படுத்துகிறார்கள். சமையலுக்கும் தக்காளியை அதிகமாக பயன்படுத்துவதையும் இல்லத்தரசிகள் குறைத்து விட்டனர்.

ஓட்டல்களின் நிலை

தக்காளி விலை ஏற்றம் காரணமாக ஓட்டல்களிலும் தக்காளியை குறைவான அளவே வாங்கி உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி போட்டு சாம்பார் வைத்த நிலை மாறி வெறும் அரை கிலோ தக்காளி போட்டு சாம்பார் தயார் செய்கிறார்கள். மேலும் தக்காளி சாதத்துக்கும் குறைவான அளவே தக்காளி பயன்படுத்துகிறார்கள். இதனால் ஓட்டல்களில் உணவின் சுவை குறைந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

இதுபற்றி குமரி மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ஷாஜகானிடம் கேட்டபோது, "தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது. தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை வதக்கும் போது கிடைக்கும் சாறு தான் கிரேவி ஆகும். அது தான் சுவை. எனவே தக்காளி மட்டும் அல்ல, எந்த காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டாலும் அதை வாங்காமல் இருக்க முடியாது. கண்டிப்பாக வாங்கி உணவுக்கு பயன்படுத்தி தான் ஆக வேண்டும். தக்காளி விலை ஏற்றம் காரணமாக தக்காளி சாதம் விற்பனையை நிறுத்த முடியாது. குறைவான தக்காளி போட்டு சாதம் தயார் செய்து கொடுப்போம். வழக்கமான உணவுகளை எவ்வளவு விலை ஏற்றம் வந்தாலும் நிறுத்த முடியாது. ஆனால் வழக்கத்தை விட குறைவாக வாங்கி அனைத்து உணவு வகைகளுக்கும் சிறிது சிறிதாக பயன்படுத்துவோம். குமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. அனைத்து ஓட்டல்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது" என்றார்.

இந்தநிலையில் தக்காளி விலை உயர்வு தொடர்பாக சமூக வலைதளத்தில் பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்