மென்பொருள் நிறுவனத்தில் வேலை தருவதாக தேனி பெண் என்ஜினீயரிடம் ரூ.14 ஆயிரம் நூதன மோசடி

மென்பொருள் நிறுவனத்தில் வேலை தருவதாக தேனியை சேர்ந்த பெண் என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.14 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தேனி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-07 16:38 GMT

பெண் என்ஜினீயர்

தேனி பாரஸ்ட்ரோடு பகுதியை சேர்ந்த அசோக் மகள் ரம்யதுளசி (வயது 22). இவர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்துள்ளார். ஒரு இணையதள முகவரியில் வேலைக்காக தனது விவரங்களை பதிவு செய்து இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை முன்னணி மென்பொருள் நிறுவனத்தின் பிரதிநிதி என்று அறிமுகம் செய்து கொண்டார்.

பின்னர் அந்த நபர் ஒரு செல்போன் எண்ணை ரம்யதுளசியிடம் கொடுத்து அந்த எண்ணுக்கு மதிப்பெண் சான்று, ஆதார், பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்குமாறு கூறினார். அதை நம்பிய அவர், தனது விவரங்களை அனுப்பி வைத்தார். அதன்பிறகு அந்த மர்ம நபர் ஒரு இணையதள முகவரியை அனுப்பி வைத்து அதில் வேலைக்கு பதிவு செய்யுமாறு கூறினார்.

அதில் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரும் பதிவு கட்டணம் செலுத்தினார்.

ரூ.14 ஆயிரம் மோசடி

இதையடுத்து அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட நபர், பதிவுக்கட்டணம் கிடைக்கவில்லை என்றும், மீண்டும் கட்டணம் செலுத்துமாறு கூறினார். அதன்படி அவர் பதிவுகட்டணத்தை மீண்டும் செலுத்தினார். பின்னர் மீண்டும் சில காரணங்களை கூறி பணம் கேட்டனர். அதை நம்பி அவர் ஆன்லைன் மூலம் 4 தவணையாக மொத்தம் ரூ.14 ஆயிரத்து 964 அனுப்பினார். ஆனால் அந்த மர்ம நபர்கள் வேலை கொடுக்கவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரம்யதுளசி இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்தார். மோசடி செய்த மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் கிரைம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்