கடற்கரையில் மீனவர்கள் மனிதசங்கிலி

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் நேற்று கடற்கரையில் மனிதசங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-14 19:34 GMT

திசையன்விளை:

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் நேற்று கடற்கரையில் மனிதசங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூண்டில் வளைவு

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை கிராமத்தில் கடந்த 10-ந்தேதி ஏற்பட்ட கடல் அரிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதாவது 30 மீட்டர் தூரம் வரையிலும் ஊருக்குள் கடல்நீர் புகுந்ததுடன் அங்கு நின்ற மின்கம்பமும் சாய்ந்தது. இதனால் கடற்கரையில் படகுகளை நிறுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதையடுத்து அங்கு தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனிதசங்கிலி

மேலும் தினமும் ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி என்று வெவ்வேறு வடிவிலான ேபாராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் கருப்புக்கொடியை ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கடலுக்குள் படகுகளில் சிறிது தூரம் சென்றும், தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது. ஏராளமான மீனவர்கள் குடும்பத்துடன் கடற்கரையில் வரிசையாக கைகோர்த்தபடி நின்று மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்