அதிக அபராதம் விதிக்கும் முறை நடைமுறைக்கு

குமரி மாவட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அதிக அபராதம் விதிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

Update: 2022-10-26 20:08 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அதிக அபராதம் விதிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

வாகன சோதனை

நாட்டில் சாலை விபத்துக்களால் ஏராளமானோர் பலியாகி வருகிறார்கள். மேலும் பலர் கை, கால்களை இழந்து பரிதாபத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த சட்டம் தமிழகத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனை நடத்தி அதிக அபராத தொகையை வசூலித்தனர்.

அதே போல குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி மற்றும் குளச்சல் ஆகிய 4 போலீஸ் துணை சரகங்களிலும் அந்தந்த போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். மேலும் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசாரும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டார்கள்.

ஹெல்மெட் அணியாமல்...

வாகன சோதனையின் போது ஏராளமான பொதுமக்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ரூ.1000 வீதம் அபராதம் விதித்தனர். இதே போல ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டியின் பின்னால் அமர்ந்திருந்த நபருக்கும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

நாகர்கோவில் மாநகரில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் மற்றும் ஆசாரிபள்ளம் போலீசார் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தினார்கள். கோட்டார் போலீஸ் நிலையம் முன் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 12 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதே போல போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் சவேரியார் ஆலய சந்திப்பில் நடத்திய வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வந்த 58 பேருக்கும், ஒரே வாகனத்தில் வந்த 3 பேருக்கும், அதிவேகமாக வந்த 3 பேருக்கும் என மொத்தம் 64 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் அருண் கூறுகையில், "அரசு உத்தரவின்படி புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் சாலை விதிகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் 10 முதல் 15 சதவீதம் மக்கள் தான் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுகிறார்கள். எனவே அவர்களையும் ஹெல்மெட் அணிய வைக்க பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது அபராத தொகை உயர்த்தப்பட்டு இருப்பதால் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.

வாக்குவாதம்

இதற்கிடையே ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கு அதிக அபராத தொகை வசூலித்ததால் ஒரு சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்