தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் உயர் கோபுர மின்கம்பம் சாய்ந்தது

திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் உயர் கோபுர மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.

Update: 2023-05-25 16:57 GMT

கட்டுப்பாட்டை இழந்த லாரி

பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் நோக்கி பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த விஜய் (வயது 27) ஓட்டினார்.

திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பகுதியில், நேற்று காலை 6.30 மணி அளவில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடியது.

ஒரு கட்டத்தில், நான்குவழிச்சாலையில் வேடசந்தூர் பிரிவில் உள்ள உயர் கோபுர மின்கம்பத்தின் மீது மோதிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 60 அடி உயரம் கொண்ட உயர் கோபுர மின்கம்பமும் சாய்ந்து சாலையில் விழுந்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளும் சுக்கு நூறாக நொறுங்கின.

போக்குவரத்து பாதிப்பு

இதேபோல் லாரியில் கொண்டு வரப்பட்ட குழாய்களும் சாலையில் சிதறின. லாரியை ஓட்டி வந்த டிரைவர் விஜய் காயமின்றி உயிர் தப்பினார். அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி, நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியையும், சரிந்து விழுந்த மின்கம்பத்தையும் அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்