முசிறியில் ஆங்கிலேயர் கலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்
முசிறியில் ஆங்கிலேயர் கலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முசிறியில் ஆங்கிலேயர் கலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம்
முசிறியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட கட்டிடங்கள் நூற்றாண்டை கடந்து நிமிர்ந்து நிற்கிறது. இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும்.
அப்போது, இந்த கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது. காரையால் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் மாடி உள்ளது. கட்டிடம் முழுவதும் பர்மா தேக்கினால் மேற்கூரை அமைத்து கட்டிடத்தின் மேல் மாடிக்கு போவதற்கு தேக்கு மரத்தினால் மாடிப்படிக்கட்டும் உள்ளது. கடந்த 1973-74-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி முசிறிக்கு அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து தற்காலிகமாக அந்த கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வட்டார கல்வி அலுவலகம்
இந்த கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல்பாட்டில் உள்ளது.. தற்போது வட்டார கல்வி அலுவலகமும், அதன் முதல் மாடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வட்டார வளர்ச்சி மைய அலுவலகமும் உள்ளது. இதில் உள்ள மர படிக்கட்டுகள் மிகவும் உறுதியாக உள்ளது. தற்போது, இந்த கட்டிடத்தில் அரச மரம் முளைத்து கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. எந்த நேரத்திலும் கட்டிடம் பள்ளிக் குழந்தைகள் மீது விழுந்து ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மராமத்து பணிகள்
இதனிடையே அந்த கட்டிடத்தை சீரமைக்காமல் அந்த கட்டிடத்தின் அருகிலேயே புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளனர். பாரம்பரியமிக்க கட்டிடத்தை சீரமைக்காமல் புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதை என்னவென்று சொல்வது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தற்போது, அங்கு பணிபுரிபவர்கள் அச்சத்துடனே பணியாற்றி வருகின்றனர்.
நூற்றாண்டை நெருங்கும் இந்த கட்டிடத்தில் மராமத்து பணிகள் செய்து புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
சமூக ஆர்வலர் கலைச்செல்வன்:- வட்டார கல்வி அலுவலகம் மற்றும் வட்டார குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வரும் இந்த கட்டிடத்தின் வளாகத்தை பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தி வருகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் தளத்தில் வட்டார வளர்ச்சி மைய அலுவலகம் செயல்பட்டு வருவதால், அங்கு அங்கன்வாடி பணியாளர்கள் தினசரி சென்று வருகின்றனர். இந்த கட்டிடம் நூறாண்டை நோக்கி கம்பீரமாக எழுந்து நின்று முசிறிக்கு பெருமை சேர்க்கும் கட்டிடம் ஆகும். எனவே ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் ஆணையர் இதை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதுப்பிக்க....
முசிறி வக்கீல் காமராஜ்:- நூற்றாண்டை நோக்கி செல்லும் கட்டிடங்களில் பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்படும். சிறப்புமிக்க இந்த கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. பேரிடர் மேலாண்மை மூலம் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இக்கட்டிடத்தில் வளர்ந்து நிற்கும் அரச மரகன்றை அகற்ற வேண்டும். கட்டிடத்தின் பாரம்பரியம், கலைநயம் மாறாமல் புதுப்பித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
நான்கு தலைமுறை
சமூக ஆர்வலர் பொன்ராஜ்:- விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடவிருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமானது கிட்டத்தட்ட 4 தலைமுறை முசிறி மக்களின் உயிரோடு கலந்தது. ஆனால் இன்று அதன் நிலை எந்தவொரு பராமரிப்புமின்றி மிக மோசமாக உள்ளது.
இந்த கட்டிடம் மேலும் சிதிலம் அடைவதற்குள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
நடவடிக்கை
முசிறி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சந்திரசேகரன்:- முசிறி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள சேதமான கட்டிடம் ஆய்வு செய்யப்பட்டு மராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.