ரோட்டில் உலா வந்த காட்டு யானை கூட்டம்

தாளவாடி அருகே ரோட்டில் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர்.

Update: 2023-07-08 20:52 GMT

தாளவாடி

தாளவாடி அருகே ரோட்டில் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர்.

யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. தீவனம் மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி காட்டை விட்டு யானைகள் வெளியேறிவிடுகின்றன. அவ்வாறு வெளியேறும் யானைகள் அடிக்கடி வனப்பகுதி ரோட்டில் வந்து நின்றுகொள்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

ரோட்டில் உலாவின

இந்தநிலையில் நேற்று மதியம் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி என்ற இடத்தில் திடீரென காட்டு யானைகள் கூட்டமாக வந்து நின்றன.

ரோட்டில் அங்கும் இங்கும் உலாவின. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். மேலும் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர்.

எச்சரிக்கை

சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு யானைகள் ரோட்டை கடந்து காட்டுக்குள் சென்றன. அதன்பின்னரே வாகனங்கள் செல்ல தொடங்கின.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'அடிக்கடி காட்டு யானைகள் சாலையை கடக்கின்றன. வாகன ஓட்டிகள் செல்பி எடுப்பதற்காக காட்டு யானைகளின் அருகே செல்லவேண்டாம்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்