மாயவரத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி வழியாக திண்டுக்கல் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 10 மணியளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் ஆசாபுரா கட்ரோட்டில் வலது புறம் லாரி திரும்பியபோது, திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் லாரியின் பின்னால் மோதியது. இதில் வைகோல் லாரி சாலையின் நடுவே தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் வத்தலகுண்டை சேர்ந்த முருகேசன் (வயது 55) என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அரசு பஸ் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் மற்றும் மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.