10 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி
மதுரையில் 10 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது.
மதுரையில் 10 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது.
அங்கன்வாடி பணியாளர்கள்
அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் சம்மேளனத்தின் 10-வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த 6-ந் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இறுதிநாள் நிகழ்ச்சியான, நேற்று காளவாசலில் இருந்து வசந்தநகர் வரை அங்கன்வாடி பணியாளர்கள் பேரணி நடந்தது. பின்னர், அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சம்மேளனத்தின் பொதுசெயலாளர் ஏ.ஆர்.சிந்து பேசியதாவது:-
அகில இந்திய மாநாட்டு பேரணி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். குழந்தைளுக்கான மானியம் குறைக்கப்பட்டதால் அவர்கள் எடையின்மை, வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு
அதேபோல, கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலத்தலைவர் உஷாராணி, தமிழ்மாநிலத்தலைவர் டெய்சி, மதுரை எம்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோரும் பேசினர். அப்போது, பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்வேறு மொழி பேசும் பிரதிநிதிகள் மாநாட்டில் விவாதம் நடத்தியுள்ளனர். மாநாட்டில் அவர்கள் கூறும் போது:-
நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்களும்-உதவியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஒரே மாதிரிதான் உள்ளது. ஊழியர்கள்-உதவியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். கிராமப்புறத்தில் விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் அவர்களது குழந்தைகள் பசியிலும், வறுமையிலும் வாடிக்கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி கவலைப்படாத பிரதமர், ஊட்டச்சத்து திட்டத்திற்கான நிதியை 30 சதவீதம் குறைத்துள்ளார். அதே நேரத்தில அதானி-அம்பானிகளுக்கு பல நூறு கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளார். குழந்தைகளை பாதுகாப்பதற்கு பதிலாக, கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாத்து வருகிறது. ரூ.1,200 மதிப்பிலான சிலிண்டருக்கு ரூ.403 வழங்கினால் குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுப்பது எப்படி? ஒரு குழந்தைக்கு 80 பைசாவில் எப்படி காய்கறி வாங்குவது?
மதுரை நகர வீதிகளில் கண்ணகி ஒருவர் மட்டுமே நீதி கேட்டார். ஆனால் 10 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் மத்திய அரசிடம் நியாயம் கேட்டு பேரணியாக வந்துள்ளனர். எனவே அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
முன்னதாக, சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் முத்துசெல்வியின் பரதநாட்டியம், வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில், மதுரை மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து நெரிசல்
முன்னதாக நேற்று மாலை அங்கன்வாடி பணியாளர்கள் சம்மேளனத்தின் சார்பில், காளவாசலில் இருந்து வசந்தநகர் ரவுண்டானா வரை பேரணி நடந்தது. இந்த பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர். இதனால், பைபாஸ் ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பேரணியால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், எஸ்.எஸ்.காலனி, எல்லீஸ்நகர், பழங்காநத்தம், வசந்தநகர், பெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.