இந்து அறநிலையத்துறை சார்பில் முப்பெரும் விழா
தேனியில், இந்து அறநிலையத்துறை சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
தேனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வள்ளலார் 200-வது அவதார நாள் விழா, திருஅருட்பா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, சன்மார்க்கச் சான்றோர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். விழாவில், திருஅருட்பா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், சுத்த சன்மார்க்க சான்றோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.