சின்னசேலத்தில், செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்:தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற பட்டதாரி வாலிபர்தாய்க்கு தீவிர சிகிச்சை
சின்னசேலத்தில் செலவுக்கு பணம் தராததால், தந்தையை கட்டையால் பட்டதாரி வாலிபர் அடித்துக்கொன்றார். மேலும் தடுக்க வந்த தாயையும் அவர் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள அசேபாநகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சீனுவாசன்(வயது 52). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது 2-வது மகன் பிரேம்குமார் (33) எம்.ஏ. பட்டதாரி. படிப்பு முடிந்த பின்னர், இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு உரிய சிகிச்சையை பிரேம்குமார் எடுத்து வந்தார்.
இந்த நிலையில், அடிக்கடி தனது பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்டு பிரச்சினை செய்து வந்துள்ளார்.
கட்டையால் தாக்குதல்
நேற்று முன்தினம் தனது பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், சீனுவாசன் பணம் கொடுக்கவில்லை. செலவுக்கு பணம் கேட்டும், தராத தனது தந்தை மீது கோபத்தில் இருந்த பிரேம்குமார், இரவு 11 மணிக்கு, வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த சீனுவாசனின் தலையில் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
அப்போது வலி தாங்க முடியாமல் அவர் சத்தமிட்டதை கேட்டு, அவரது மனைவி விஜயா ஓடி வந்து தடுத்தார். இதில் தனது தாயையும் பிரேம்குமார் தாக்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து, பிரேம் குமாரை தடுத்து நிறுத்தி படுகாயமடைந்த சினுவாசன், விஜயா ஆகியோரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சீனுவாசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மகன் கைது
விஜயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வியாபாரம் சம்பந்தமாக வெளியூரில் இருந்த சீனுவாசனின் இளைய மகன் விக்னேஷ் குமார் (30) சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.
பெற்ற மகனே தந்தையை கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.