அந்தரத்தில் தொங்கும் அரசு பள்ளி கட்டிடம்

கோத்தகிரி அருகே அரசு பள்ளி கட்டிடத்தின் அஸ்திவாரம் பழுதடைந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. எனவே, கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-07-20 19:15 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே அரசு பள்ளி கட்டிடத்தின் அஸ்திவாரம் பழுதடைந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. எனவே, கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு பள்ளி

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் கேர்பெட்டா பகுதியில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள ஆய்வக கட்டிடத்தின் அடிப்பகுதி (அஸ்திவாரம்) பழுதடைந்து உள்ளது. இதனால் தூண்கள் மட்டுமே கட்டிடத்தை தாங்கி நிற்கிறது. இதன் காரணமாக கட்டிடம் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காட்சி அளிக்கிறது.

இதனால் பள்ளி கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. செங்குத்தான பகுதியில் ஆய்வக கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் அடிப்பகுதியில் மண் அரித்தது போல் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்ல பள்ளி மாணவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பராமரிக்க வேண்டும்

மேலும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் அச்சமடைந்து இருக்கின்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. ஆனால், பணிகள் நிறைவு பெற்று சில மாதங்களில் கட்டிடத்தின் அஸ்திவாரங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, உடனடியாக கட்டிடத்தை உரிய முறையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்