லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
கரூரை அடுத்த சுக்காலியூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து பெங்களூரு நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சை சாலமன்ராஜ் ஓட்டி சென்றார். கண்டக்டர் குழந்தைவேல் ஆகியோருடன் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் சுக்காலியூர் பிரிவு அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் பஸ் வந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக அரசு விரைவு பஸ் மோதியது. இதில் நிலை தடுமாறி தடுப்புகளை தாண்டி கொண்டு சாலையோர தடுப்பு வேலிகளை இடித்துக் கொண்டு பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பஸ் டிரைவர் சாலமன்ராஜிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து விபத்துக்குள்ளான பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பத்திரமாக மற்றொரு பஸ்சில் அவரவர் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.