முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி
கருணாநிதியின் சமாதியில் வைக்கக்கோரி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிறுமி பேனா வழங்கினார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் கூட்டம் முடிவடைந்ததை அடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வாகனத்தில் வந்த போது, அங்கு நின்ற பொதுமக்கள் அவரை பார்த்து ஆரவாரம் செய்தனர். அப்போது அவர் பொதுமக்களை பார்த்து கையசைத்தார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரின் வாகனம் அருகே சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் சிறுமி ஒருவர் முதல்- அமைச்சரை பார்க்க ஆவலாக நின்றிருந்தார். இதைப் பார்த்ததும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தினார். பின்னர் சிறுமி அவரின் அருகே சென்று தான் வைத்திருந்த பேனா ஒன்றை அவரிடம் வழங்கி, அதை மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் சமாதியில் வைக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேனாவைப் பெற்றுக் கொண்டு சிறுமிக்கு கைகுலுக்கி விட்டு அங்கிருந்து ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.
அந்த சிறுமி காட்பாடி வஞ்சூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரது மகள் யாழினி (வயது 10) என்பவர் ஆவார். அவர் கூறுகையில் முதல்- அமைச்சரை பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது அவரிடம் தான் வைத்திருந்த பேனாவை கொடுத்து கலைஞரின் சமாதியில் வைக்கக் கூறினேன். அவரும் அதைப் பெற்றுக் கொண்டார். அவரை பார்த்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.