விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த சிறுமி, புற்றுநோய் பாதிப்பில் சிகிச்சை பலனின்றி பலி

விளையாட்டு போட்டிகளில பல சாதனைகளை படைத்த சிறுமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-10-16 15:53 GMT

மாணவி சத்யா, விளையாட்டு போட்டிகளில் வென்ற பதக்கங்களுடன் (பழைய படம்)

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா சூளாமலை ஊராட்சி மேல்கொட்டாயைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 42). இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு, 17 வயதில் மஞ்சு என்ற மகனும் சத்யா (14) என்ற மகளும் இருந்தனர். சூளாமலை அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த சத்யா, ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

மாநில அளவிலான, 42 மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்ற அவர் கடந்த, 2018-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் மாநில அளவில் ஏழாவது இடம் பிடித்தார். மாவட்ட அளவிலான போட்டிகளில், 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த, 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதுகுபுறத்தில் ஏற்பட்ட வலியால் ஸ்கேன் செய்து பார்த்ததில், முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிந்தது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த, 2021-ம் ஆண்டு ஜூலை, 15-ந் தேதி புற்று நோய் கட்டி அகற்றப்பட்டது. பின்னர் சத்யாவுக்கு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் சத்யாவுக்கு மீண்டும் முதுகுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பரிசோதித்த போது மீண்டும் கட்டி வளர்ந்திருப்பது தெரிந்தது.

விளையாட்டு போட்டிகளில் 30 பதக்கங்களை வென்ற அரசு பள்ளி மாணவி புற்றுநோயால் பாதிப்பு-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய பெற்றோர் வேண்டுகோள்

சத்யாவுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய், மூன்றாவது நிலையை எட்டியதால், மருத்துவ செலவிற்கு, 30 லட்சம் ரூபாய் ஆகும் எனவும், இதில், 5 லட்சம் ரூபாய் சத்யா தரப்பில் கட்டினால், 20 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நிலத்தை அடகு வைத்து, ஒரு லட்சம் ரூபாய் கட்டிய சகாதேவன், தன் மகளை மருத்துவத்துறையினர் காப்பாற்ற வேண்டும் எனக்கூறினர்.

இந்த நிலையில், புதுச்சேரி தனியார் நிறுவனத்தினர் முழு செலவையும் ஏற்று சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சத்யா இன்று உயிரிழந்தார். இதையடுத்து இன்று அந்த பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியது.

Tags:    

மேலும் செய்திகள்