பாறை மீது மோட்டார்சைக்கிள் மோதி சிறுமி பலி

ஏலகிரி மலையில் பாறை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி பலியானாள். கணவன்- மனைவி காயமடைந்தனர்.

Update: 2022-08-21 17:53 GMT

ஏலகிரி மலையில் பாறை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி பலியானாள். கணவன்- மனைவி காயமடைந்தனர்.

சுற்றுலா சென்றனர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மேல் கொத்தகுப்பம் கூத்தாண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் திலீப்குமார் (வயது 30). இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள ஷூ கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். விடுமுறை என்பதால் திலீப்குமார் தனது மனைவி தனலட்சுமி, மகள்கள் யாஷினி (8), மயூரி (5), ரோஷினி (1 1/2) மற்றும் தனலட்சுமியின் தங்கை தனம் (24) ஆகிய 6 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்னர்.

பின்னர் ஏலகிரி மலையில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு மாலையில் 6 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். மலையில் இருந்து இறங்கியபோது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது.

சிறுமி பலி

இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது. அதில் முன்னால் அமர்ந்து இருந்த யாஷினி பாறை மீது விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். திலீப்குமார் மற்றும் தனலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்தவழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்ததும் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் சிறுமி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்