திண்டுக்கல் அருகே குட்டையில் மூழ்கி சிறுமி பலி
திண்டுக்கல் அருகே குட்டையில் மூழ்கி சிறுமி பலியானாள்.
திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துஆவாரம்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி வில்லியம். இவரது மனைவி தெய்வானை. இவர்களது 2½ வயது மகள் ஓவியா. இன்று காலை கணவன்-மனைவி 2 பேரும் தங்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். உடன் மகள் ஓவியாவையும் அழைத்து சென்றனர்.
அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த ஓவியா திடீரென்று மாயமானாள். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி தங்களது மகளை தேடி பார்த்தனர். இதற்கிடையே தோட்டத்தில் குப்பைகள் கொட்டுவதற்காக சுமார் 3 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டிருந்தது.
சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அந்த குழியில் தண்ணீர் தேங்கி, குட்டையாக மாறியது. அந்த குட்டையில் ஓவியா மயங்கி கிடந்தாள். இதனை பார்த்த அந்தோணி வில்லியம், தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஓவியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குட்டையில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.