குற்றாலத்தில் திக்.. திக்.. காட்சிகளால் திடீர் பரபரப்பு:அருவி தடாகத்தில் குளித்த சிறுமிதண்ணீரில் அடித்து செல்லப்பட்டாள்-துணிச்சலாக 40 அடி பள்ளத்தில் இறங்கி உயிருடன் மீட்ட இளைஞர்

பழைய குற்றாலம் அருவி தடாகத்தில் குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 4 வயது சிறுமியை துணிச்சலாக 40 அடி ஆழ பள்ளத்தில் இறங்கி உயிருடன் இளைஞர் மீட்டு வந்தார். குற்றாலத்தில் நடந்த இந்த திக்..திக்.. காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-29 18:45 GMT

பழைய குற்றாலம் அருவி தடாகத்தில் குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 4 வயது சிறுமியை துணிச்சலாக 40 அடி ஆழ பள்ளத்தில் இறங்கி உயிருடன் இளைஞர் மீட்டு வந்தார். குற்றாலத்தில் நடந்த இந்த திக்..திக்.. காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

குவியும் சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் சமீப காலமாக பெய்து வரும் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து குவிகிறார்கள். அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

தண்ணீரில் விழுந்த சிறுமி

நேற்று பழைய குற்றாலம் அருவியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நவநீதகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் பழைய குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.

அவரது மகள் ஹரிணி (வயது 4), அருவியின் முன்புறம் இருந்த தடாகத்தில் மற்ற குழந்தைகளுடன் குளித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

திடீரென அருவிக்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். அந்த இடத்தில் பார்த்தபோது சிறுமி ஹரிணி தடாகத்தில் உள்ள துவாரத்தின் வழியாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தாள். இதை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகளும் திடுக்கிட்டனர்.

சிறுமியை மீட்ட வாலிபர்

அப்போது அங்கு நின்ற தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த இளைஞர் விஜயகுமார் பாய்ந்து சென்று அந்த பள்ளத்தில் இறங்கி, சிறுமி இருந்த இடத்திற்கு துணிச்சலாக சென்றார். அப்போது சிறுமி ஹரிணி ஒரு பாறையின் இடுக்கில் தண்ணீரில் தத்தளித்தபடி ஒரு பாறையை பிடித்துக்கொண்டிருந்தாள். அந்த பகுதிக்கு சென்ற விஜயகுமார், சிறுமி ஹரிணியை மீட்டு தூக்கிக்கொண்டு வந்த வழியாகவே மேலே வந்தார்.

பின்னர் அவரிடம் இருந்து சிறுமி ஹரிணியை வாங்கிக்கொண்ட மேலும் சிலர், இது யாருடைய குழந்தை? என்று கேட்டனர்.

திக்..திக்..காட்சிகள்

அப்போது அந்த சிறுமியின் தாய் அங்கு வந்து, தனது குழந்தை தான் என்று கூறி குழந்தையை பெற்றுக்கொண்டார். அந்த சிறுமியின் நாடியில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி உயிர் தப்பி உள்ளாள்.

பின்னர் சிறுமி ஹரிணியை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதன்பிறகு சிறுமியும், பெற்றோரும் ஊருக்கு புறப்பட்டனர்.

இந்த திக்..திக்..காட்சிகளால் பழைய குற்றாலம் அருவி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்காரர் பேட்டி

இதுகுறித்து பழைய குற்றாலம் அருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் சிவராஜ் கூறியதாவது:-

நான் இங்கு பாதுகாப்பு பணியில் காலையிலிருந்து ஈடுபட்டு வருகிறேன். அருவிக்கரை அருகில் பணியில் இருந்தேன். சுமார் 11 மணிக்கு திடீரென சுற்றுலா பயணிகளின் கூச்சல் சத்தம் கேட்டது. நான் அங்கு ஓடி சென்று பார்த்தேன். அப்போது ஒரு குழந்தையை சுற்றுலா பயணிகள் கையில் வைத்துக் கொண்டு யார் குழந்தை? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். சுமார் 500 பேர் சூழ்ந்து நின்றனர்.

அதிசயமான சம்பவம்

அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது. சுமார் 5 நிமிடம் கழித்து அந்த சிறுமியின் தாய் எனது குழந்தை என்று வந்தார். அவரிடம் யார்? என்று விசாரிப்பதற்குள் குழந்தையுடன் அவர்கள் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று சென்று விட்டார்கள். அதன் பின்பு தான் அங்கு நடந்ததை கேட்டேன்.

அந்த இடத்தில் சிறுமி விழுந்து மீட்கப்பட்டது அதிசயமான சம்பவம் தான். ஒரு இளைஞர் அங்கு இறங்கி சிறுமியை காப்பாற்றியுள்ளார்.

வலை இல்லை

அருவி நீர் வெளியே செல்லும் இடத்தில் பெரிய துவாரம் உள்ளது. அதனை பொதுப்பணித்துறையினர் வலை வைத்து அடைத்து இருப்பார்கள். தற்போது அந்த வலை அங்கு இல்லை.

இந்த தகவல் அறிந்ததும் ஆயிரப்பேரி பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டி இங்கு வந்து அந்த இடத்தில் வலை அமைப்பதாக கூறிச் சென்றுள்ளார்.

சுற்றுலா பயணிகள் குளிக்க வரும்போது தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மாலை அருவி நீர் வெளியே செல்லும் இடத்தில் பெரிய துவாரம் பகுதியில் வலை வைத்து அடைக்கும் பணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்