கியாஸ் சிலிண்டர் வெடித்து ஓட்டலில் தீ விபத்து
வாணியம்பாடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து ஓட்டலில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் கோழிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின.
சிலிண்டர் வெடித்தது
வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய பகுதியில் உள்ள நாயனசெருவு கிராமத்தை சேர்ந்தவர் அனுமுத்து (வயது 50). இவர் அதே கிராமத்தில் கோழிக்கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென அவரது கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் ஏற்பட்ட தீயால் அங்கிருந்த குடிசை மற்றும் ஓட்டல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஓட்டலில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
கோழிகள் கருகின
இதுபற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினர் சென்று பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகின. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.