பூண்டு வியாபாரியின்மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.85 ஆயிரம் திருட்டு
பெரியகுளம் அருகே பூண்டு வியாபாரி மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் திருடுபோனது.
பெரியகுளம் வடகரை ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 36), பூண்டு வியாபாரி. கடந்த 4-ந்தேதி இவர், பூண்டு வாங்குவதற்காக வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வடுகப்பட்டிக்கு சென்றார். பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு அவர் பூண்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.85 ஆயிரம் திருடுபோய் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கணேசன் மோட்டார் சைக்கிளின் சீட்டின் அடியில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கணேசன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.