ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி கடன் செயலி மூலம் பணம் பறித்த 5 பேர் கும்பல் கைது

ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி கடன் செயலி மூலமாக பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

Update: 2023-01-06 21:16 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கடன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள், பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் கூடுதல் பணம் கேட்டு, அவர்களின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி ஒரு கும்பல் பணம் பறிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்தனர். பாதிக்கப்பட்ட ஒருவரிடம் அந்த கும்பல் பேசிய செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியபோது அந்த எண், திருப்பூர் ரெயில் நிலையம் அருகே காதர்பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து இயங்கியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் கால் சென்டர் நிறுவனம் போல் அமைத்து, சிம் பாக்ஸ்களை வைத்து பலரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கடன் கொடுப்பதற்கு பேசியது தெரியவந்தது. அங்கிருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

5 பேர் கைது

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முகமது அஸ்கர் (வயது 24), முகமது ஷாபி (36), மலப்புரத்தை சேர்ந்த சேர்ந்த முகமது சலீம் (37), அனீஷ் மோன் (33), அஸ்ரப் (46) என்பது தெரியவந்தது.

இவர்கள் ஒருநாளைக்கு சராசரியாக தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 700 பேரை தொடர்பு கொண்டு பேசி, கடன் பெற்றவர்களை மிரட்டியது தெரியவந்துள்ளது. இவ்வாறு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி மிரட்டுவதற்காக மட்டும் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.3½ லட்சம் முதல் ரூ.4½ லட்சம் வரை கமிஷன் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் செலுத்திய பணம் நைஜீரியா, சீனா, இந்தோனேஷியா நாட்டு செயலி மூலமாக எடுக்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 11 சிம் பாக்ஸ்கள், 6 மோடம், 1 யூ.பி.எஸ், 1 பேட்டரி, 500 சிம்கார்டுகள், 3 மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்