வாழப்பாடி அருகே செல்போன் கோபுரம் திருடி விற்ற கும்பல் சிக்கியது

வாழப்பாடி அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரத்தை நூதன முறையில் திருடி விற்பனை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-28 22:01 GMT

வாழப்பாடி:

செல்போன் கோபுரம் திருட்டு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு செல்போன் கோபுரத்தை கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி, போலி ஆவணங்களை காண்பித்து மர்ம கும்பல் ராட்சத கிரேன் எந்திரங்களை பயன்படுத்தி கழற்றி கடத்தி சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் தமிழரசன், தங்களது நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரத்தை திருடிச்சென்ற மர்மகும்பலை கண்டறிந்து கோபுரத்தை மீட்டு கொடுக்க வேண்டுமென வாழப்பாடி போலீசில் மறுநாளே புகார் செய்திருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து கடந்த 26-ந் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட கும்பலை கூண்டோடு கைது செய்து செல்போன் கோபுரத்தை மீட்டு கொடுக்க, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டார். இதையடுத்து வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்வேதா, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபால், உதயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், செல்போன் கோபுரத்தை தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 33), நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஏமன்குளம் பகுதியை சேர்ந்த நாகமுத்து (35), வாழப்பாடி காமராஜர் நகர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த ராகேஷ் சர்மா (38) ஆகிய மூவரும் திருடி, ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் எடை மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியில் திருடப்பட்ட செல்போன் கோபுரத்தின் பாகங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் மடிக்கணினி, ஜெனரேட்டர் சுமார் 10 டன் எடையுள்ள இரும்பு தளவாட பொருட்கள் என ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நூதன திருட்டு சம்பவத்தில் வேறுயாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும், மீட்கப்படாத மற்ற உதிரி பாகங்களை மீட்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிர்ச்சி தகவல்

இந்த சம்பவத்தை போன்றே, ஒரு கும்பல் உள்ளூர் புள்ளிகளின் உதவியுடன், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செயல்படாத ஏராளமான செல்போன் கோபுரங்களை நூதன முறையில் திருடி உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சென்னை, ராணிப்பேட்டை, தேனி மாவட்டம் பெரியகுளம், திருப்பத்தூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதே பாணியில் செல்போன் கோபுரம் திருடப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்