8-ம் வகுப்பு மாணவியுடன் குடும்பம் நடத்திய மீன்பிடி தொழிலாளி கைது

நாகப்பட்டினத்துக்கு கடத்தி சென்று 8-ம் வகுப்பு மாணவியுடன் குடும்பம் நடத்திய மீன்பிடி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-16 18:45 GMT

கன்னியாகுமரி:

நாகப்பட்டினத்துக்கு கடத்தி சென்று 8-ம் வகுப்பு மாணவியுடன் குடும்பம் நடத்திய மீன்பிடி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மாணவி மாயம்

நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

குடும்பம் நடத்திய தொழிலாளி

விசாரணையில், மாணவி மாயமான நேரத்தில் 3 குழந்தைகளின் தந்தையான செல்வகுமார் என்ற செந்தில் (வயது 37) என்பவரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. மீன்பிடி தொழிலாளியாக வேலை பார்த்த அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் மாணவியை அவர் கடத்தி சென்று இருக்கலாம் என போலீசார் கருதினர். அதை தொடர்ந்து செந்திலின் செல்போன் எண்ணை கண்காணிக்க தொடங்கினர். அப்போது அவரது செல்போன் எண் நாகப்பட்டினத்தில் உலா வந்ததை கண்டுபிடித்தனர்.

உடனே கன்னியாகுமரி மகளிர் போலீசார் நாகப்பட்டினம் விரைந்து சென்று அவரை தேடிய போது, வாடகை வீட்டில் மாணவியுடன் குடும்பம் நடத்தியது அம்பலமானது.

கைது

பின்னர் போலீசார் செந்திலை மடக்கி பிடித்து மாணவியை மீட்டனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

8-ம் வகுப்பு மாணவியை கடத்தி குடும்பம் நடத்தியதாக 3 குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்