விருத்தாசலத்தில் தண்டவாளம் அருகே பற்றி எரிந்த தீ2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

விருத்தாசலத்தில் தணடவாளம் அருகே பற்றி எரிந்த தீயின் காரணமாக, 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது

Update: 2023-08-08 18:45 GMT

விருத்தாசலம், 

.தண்டவாளத்தையொட்டி தீ

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு அடுத்து உள்ளது தாழநல்லூர் ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்துக்கு அருகே விருத்தாசலம்-திருச்சி சாலையின் குறுக்கே ரெயில்வே கேட் உள்ளது.

இந்த ரெயில்வே கேட்டில் உள்ள கேட் கீப்பர் நேற்று மாலை வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது, மாலை 6.45 மணிக்கு மேல், ரெயில்வே கேட்டில் இருந்து சற்று தூரத்தில் தண்டவாளத்தையொட்டி தீப்பிடித்து எரிந்ததை அவர் பார்த்தார். உடன் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அருகே சென்று பார்த்த போது, தண்டவாளத்தையொட்டி உள்ள ஏரியில் விளைந்திருந்த விழல்கள் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

அதன் அருகே நெருங்க முடியாத அளவுக்கு அனல் இருந்தது. மேலும் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

ரெயில் செல்வதில் சிக்கல்

ஏரிக்கு மிக அருகிலேயே தண்டவாளம் இருந்ததால், அந்த பகுதியின் வழியாக ரெயில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், இரவு 7 மணிக்கு ஆந்திரமாநிலம் காட்சிகுடாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தை கடந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் அந்த ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்து, தாழநல்லூர் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தினர்.

இதற்கிடையே இரவு 7.20 மணிக்கு அந்த ரெயிலுக்கு பின்னால் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில்வே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, காட்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பின்னால், சற்று தொலைவில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி அறிந்த விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னப்பன், ராஜன், தனிப்பிரிவு காவலர் ராம்குமார் மற்றும் போலீசார் தாழநல்லூருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தீ விபத்து பற்றி அறிந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் விரைந்து, சென்று ஏரியில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னரே தீ கட்டுக்குள் வந்தது.

இதன்பின்னர், இரவு 9.15 மணிக்கு காட்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலும், சிறிது நேரத்துக்கு பின்னர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

மேலும் 2 ரெயில்கள் தாமதம்

டெல்லியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு இரவு 8.40 மணிக்கு வந்தது. ஏரியில் ஏற்பட்ட தீ விபத்தால், 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நடுவழிவில் நிறுத்தப்பட்டதால், அதற்கு பின்னால் வந்த நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் விருத்தாசலத்தில் நிறுத்தப்பட்டது. சுமார் 20 நிமிடம் தாமதத்துக்கு பின்னர் அங்கிருந்து அந்த ரெயில் புறப்பட்டது.

இதேபோன்று, திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த பயணிகள் ரெயில் ஈச்சங்காடு ரெயில் நிலையத்தில் நிறத்திவைக்கப்பட்டது. சுமார் 30 நிமிடம் காலதாமத்தில் அங்கிருந்து பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.

தாழநல்லூர் ரெயில்வே கேட் கீப்பர் சாமர்த்தியமாக செயல்பட்டதால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுவழியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால், பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள்.

===

Tags:    

மேலும் செய்திகள்