வாணியம்பாடி அருகே பழக்கடையில் நள்ளிரவில் தீ விபத்து

வாணியம்பாடி அருகே பழக்கடையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-09-15 18:54 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே பழக்கடையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

வாணியம்பாடியை அடுத்த பத்தாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் பழக்கடை மற்றும் பழச்சாறு கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற சில நிமிடங்களில் திடீரென கடையில் தீ பற்றி எரியத்தொடங்கியுள்ளது.

மேலும் கடையில் இருந்த மினி சிலிண்டர் வெடித்து சிதறி தீ கொழுந்து விட்டு எறிய தொடங்கியுள்ளது.

உடனே அந்தப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றுள்ளனர். ஆனாலும் தீ அதிகமாக பரவியதால் உடனடியாக தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் பொதுமக்கள் உதவியோடு சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ பரவிய தொடங்கியதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் வெப்பம் அதிகமானதால் சிலிண்டர் வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பழங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமானது.

Tags:    

மேலும் செய்திகள்