சின்னமுட்டத்தில் படகு கட்டும் தளத்தில் தீ விபத்து
சின்னமுட்டத்தில் படகு கட்டும் தளத்தில் தீ விபத்து நடந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தின் அருகில் படகு கட்டும் தளம் உள்ளது. இந்த தளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள பதிவெண் கொண்ட 2 கடத்தல் பைபர் படகுகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்றிரவு இந்த படகுகளில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென எரிய தொடங்கியது. அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் தீ வேகமாக பரவத் தொடங்கியது. இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பென்னட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 2 பைபர் படகுகளும் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள படகுகள் தப்பின.
--