வாகன சோதனையில் ரூ.5½ லட்சம் அபராதம்
நாமக்கல், திருச்செங்கோட்டில் வாகன சோதனையில் ரூ.5½ லட்சம் அபராதம் வசூலித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடந்த 11-ந் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சரக்கு வாகன டிரைவர்களுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேசிய நெடுஞ்சாலைகளில் எதிர் திசையில் செல்வதை தடுப்பது குறித்தும், இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தை தடுக்க சிவப்பு பிரதிபலிப்பான் ஒட்டுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த 10 வாகனங்களை சோதனை செய்தனர். பின்னர் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை வாடகைக்கு இயக்கியது தொடர்பாக 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் சாலை பாதுகாப்பு வாரம் மற்றும் தூய்மை வாரத்தை முன்னிட்டு திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாம பிரியா தலைமையில் திருச்செங்கோடு மலை சுற்றி பாதை அருகே வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. இதில் அதிக பாரம் ஏற்றி வந்த 7 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த வாகன தணிக்கையில் ரூ.2½ லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.