விபத்தை ஏற்படுத்திய கியாஸ் லாரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்
நாகர்கோவிலில் தடையை மீறிச்சென்று விபத்தை ஏற்படுத்திய கியாஸ் லாரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில்,
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலைய சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி சில கனரக வாகனங்கள் அந்த பகுதி வழியாக சென்று விபத்துகளை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று ஒரு கியாஸ் நிறுவன லாரி கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றியபடி அந்த வழியாக சென்றது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்த அந்த பகுதி மக்களில் சிலர் போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அந்த லாரியை வழிமறித்து நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகாரும் செய்தனர். அப்போது போலீஸ் நிலைய சாலையில் கனரக வாகனங்கள் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிமேனகா தடையை மீறி போலீஸ் நிலைய சாலையில் சென்ற கியாஸ் லாரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் இந்த சாலையில் கனரக வாகனத்தை இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.