"வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்கு தேசிய விருது கொடுத்திருக்கலாம்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்கு தேசிய விருது கொடுத்திருக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
கடந்த சில நாட்களுக்கு முன்பு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் ஜெய்பீம், கர்ணன்,சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் ஒரு படத்திற்கு கூட விருதுகிடைக்கவில்லை. இந்நிலையில், ஜெய்பீம் படத்திற்காகவாது விருது கொடுத்திருக்கவேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
அப்போது, ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை, தி காஷ்மீர் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கிறது இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் " வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும். ஏனென்றால் வடசென்னையின் பாரம்பரியமே குத்துச்சண்டை தான். வடசென்னை என்றால் வீரம் விளைந்த மண் யாரும் எங்களை மோத முடியாது.
எனவே, இப்படியான ஒரு மண்ணில் ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த படத்திற்கு தேசிய விருது கண்டிப்பாக கொடுத்திருக்கலாம். அதைப்போலவே சில படங்களுக்கு கொடுத்திருக்கலாம். அதுக்காக நான் மற்ற படங்களை குற்றம் சொல்ல முடியாது. நான் காஷ்மீர் பைல்ஸ் பார்க்கவில்லை பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கு என்று சொல்கிறேன்" என்றார்.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்தரி இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. இந்த திரைப்படத்திற்கு தேசிய ஒருங்கிணைப்புக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.