சினிமா பாடலை பாடி மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பெண் போலீஸ் அதிகாரி
அரசு பள்ளி விழாவில் சினிமா பாடலை பாடி மாணவர்களுக்கு பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சூலூர்
அரசு பள்ளி விழாவில் சினிமா பாடலை பாடி மாணவர்களுக்கு பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு
சூலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் அவர் பள்ளி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்ததுடன், ஸ்மார்ட் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அங்கு செய்யப்பட்டு உள்ள வசதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் மாணவ-மாணவிகள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெரியவர்களுக்கு மரியாதை
யார் வேண்டும் என்றாலும் அறிவுடையவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். ஒருவருக்கு அதிக திறமை இருந்தாலும் அவருக்கு நல்ல குணம் இல்லை என்றால் அந்த திறமை வீண்தான். பள்ளியில் ஒழுக்கம்தான் முக்கியம். நமது பெற்றோருக்கு பின்னர் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் நமக்கு முக்கியமானவர்கள். வாழ்க்கையில் நாம் முன்னேற அவர்களின் பங்குதான் அதிகம். எனவே மாணவர்களாகிய நீங்கள் பள்ளியில் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும். அதுபோன்று வீட்டிலும் உள்ள பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாடல் பாடினார்
பின்னர் அவர், இதில் யார் எல்லாம் போலீசாக விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பெரும்பாலான குழந்தைகள் கைகளை உயர்த்தினார்கள். உடனே நன்றாக படித்தால்தான் போலீஸ் அதிகாரிகளாக ஆக முடியும் என்று கூறினார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த படத்தில் வரும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி... இந்த நாடே இருக்குது தம்பி... என்ற பாடலை ராகத்துடன் பாடினார். அதை மாணவர்கள் திரும்பி பாடினார்கள். கோவையில் பள்ளி விழாவில் பெண் போலீஸ் அதிகாரி சினிமா பாடலை ராகத்துடன் பாடி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.