மசினகுடி அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை-வனத்துறையினர் விசாரணை
மசினகுடி அருகே வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்
மசினகுடி அருகே வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் யானை
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வெளி மண்டல பகுதியான மசினகுடி, சிங்காரா, சீகூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், செந்நாய்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகிறது. இந்த நிலையில் சீகூர் வனச்சரக பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர்.
அப்போது காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் துணை இயக்குனர் அருண், வனச்சரகர் தயானந்தன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து காட்டு யானை இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
உடற்பாகங்களை சேகரித்து விசாரணை
பின்னர் காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, சுமார் 50 வயதான பெண் காட்டு யானை வயது மூப்பு காரணமாக இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இருப்பினும் சில உடற்பாகங்கள் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகு காட்டு யானை என்ன காரணத்துக்காக இறந்தது என தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.