பள்ளிக்கு சென்றபோது காரை வழிமறித்து 3 வயது சிறுவனை கடத்திய தந்தை

பள்ளிக்கு சென்றபோது காரை வழிமறித்து 3 வயது சிறுவனை தந்தையே கடத்தி சென்றார்.

Update: 2023-06-27 23:59 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கடமலைகுன்று பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்திற்கு நேற்று பிலாங்காலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி குழந்தைகளை ஒரு காரில் சுரேஷ் என்பவர் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

கடமலைக்குன்று அருகே சென்றபோது, 2 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் அந்த காரை வழிமறித்தது. பின்னர் திடீரென அந்த கார்களில் இருந்த இறங்கிய கும்பல் பள்ளிக்குழந்தைகள் இருந்த காரில் இருந்த 3 வயதுடைய ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக தூக்கி கடத்திச் சென்றுவிட்டனர்.

இரும்பு கம்பியை காட்டி மிரட்டல்

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த கார் டிரைவர் சுரேஷ் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கடத்தப்பட்ட சிறுவன் பிலாங்காலை பகுதியை சேர்ந்த ஜெயப்பிரியா (வயது 27) என்பவரது மகன் ஆத்விக் பிரியன் (3) என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயப்பிரியாவை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சிறுவனின் தந்தையை இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.

குடும்ப தகராறு

ஜெயப்பிரியாவுக்கும், அம்மாண்டிவிளையை சேர்ந்த கார் டிரைவரான பிபின் பிரியன் (29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகன் ஆத்விக் பிரியன். குடும்ப தகராறு காரணமாக ஜெயப்பிரியா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் பிலாங்காலையில் உள்ள தந்தை சுந்தர் ராஜ் வீட்டுக்கு வந்து வசித்தார். மகன் ஆத்விக் பிரியனை கடமலைகுன்று தனியார் பள்ளியில் பிரீ.கே.ஜி. வகுப்பில் சேர்த்தார். சிறுவன் தினமும் பள்ளிக்கு காரில் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை பள்ளிக்கு காரில் செல்லும் வழியில்தான் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியது.

கணவர் மீது புகார்

இதுகுறித்து ஜெயப்பிரியா தக்கலை போலீஸ் நிலையத்தில் கணவர் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிபின் பிரியனின் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அவர் ஈத்தாமொழி பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று மதியம் 2 மணியளவில் போலீசார், ஜெயப்பிரியாவுடன் ஈத்தாமொழி பகுதிக்கு சென்று பிபின் பிரியனின் நண்பர் வீட்டில் அடைத்து வைத்திருந்த சிறுவன் ஆத்விக் பிரியனை மீட்டனர். இதற்கிடையே பிபின் பிரியன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பிபின் பிரியன், அவரது தாயார் பூமதி, சகோதரி கமலா பிரித்தி, நண்பர் அஜித் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்