கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு
கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்கப்பட்டார். மேலும், சுழலில் சிக்கிய மற்றொருவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கொள்ளிடம் ஆறு
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பெரியமறை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 57). இவர் நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றின் திட்டில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை ஓட்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவரை அரியலூர் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில், முருகானந்தத்தின் உறவினரான தஞ்சை மாவட்டம் மடம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (54) என்பவர் முருகானந்தத்தை தேடுவதற்காக நேற்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய போது சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிணமாக மீட்பு
இதையடுத்து, ஆற்றில் மூழ்கிய 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நடுத்திட்டு மேலராமநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்த சிலர், ஆற்றில் பிணம் ஒன்று மிதந்து வந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்த உடலை கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தது கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஆறுமுகம் கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.